தூக்கம் கலைத்த பிக்பாஸ் ; உடலும் உள்ளமும் நலம்தானா?


என் தோழி ரகசியமாக அழைத்து, என்னிடம் கேட்டார், ‘ நம் அலுவலகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றை வைத்து, யாரையாவது வெளியேற்ற சொன்னால், யாரை வெளியேற்றுவாய்’ என்றார். ‘உங்களுக்கு யாரையாவது வெளியேற்றும் எண்ணம் உண்டா’ என்று அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டேன். கொஞ்சமும் தயங்காமல், ‘ஆமாம், நான்கு பேரை வெளியேற்ற மனதில் தீர்மானித்து வைத்திருக்கிறேன்’ என்று கொஞ்சமும் சலமின்றி முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்புடன் கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி, எப்படியான உளவியல் தாக்குதலை நம்மை சுற்றியிருப்பவர்களிடம் நிகழ்த்தியிருக்கிறது என்பதற்கான ஒரு நல்ல உதாரணம் இது. நான்கு பேரை தன் பணிக்குழுவிலிருந்து வெளியேற்றுவதோடு மட்டும் நிற்கவில்லை அவர் கற்பனை. தன் அலுவலகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தினால், 100 நாட்களும் எப்படியிருக்கும் என்பது வரைக்கும் கூட அவர் யோசித்து வைத்திருக்கிறார் என்பதை அறிந்தபோது அதிர்ந்தே போனேன். இவரை மட்டும் குற்றம் சொல்வதிற்கில்லை. பல தமிழர்களின் ஆழமனதில் உறங்கிக்கொண்டிருந்த பிக்பாஸ் மிருகம் தற்போது தட்டியெழுப்பப் பட்டிருக்கிறான். ஒவ்வொருவரும் தங்களுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சியை மனதில் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்கும் ஓவியாவுக்கு போட்ட 1.5 கோடி ஓட்டுகளை எனக்கு போட்டிருந்தால் தமிழகத்தை காப்பாற்றியிருப்பேன் என்று பா.ம.க., அன்புமணி பேசும் அளவுக்கு தவிர்க்க முடியாத பேசுபொருளாக பிக்பாஸ் திகழ்கிறது. தவிர, ஏதேனும் சின்ன காரணம் கிடைத்தாலும் கூட, பிக்பாஸூம் அவ்வப்போது செய்தியாளர் சந்திப்பை வைத்து தம்மை சுற்றிய பரபரப்பை சற்றும் குறையாதபடிக்கு பார்த்து கொள்கிறார். ஜல்லிக்கட்டு, கார்ப்பரேட்டு அரசியல் என்று பேசிக்கொண்டிருந்த தமிழர்களின் ஒட்டுமொத்த கவனமும், அர்த்தமற்ற அடுத்தவரின் சண்டைகளை மையப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை நோக்கி திசைதிரும்புவது குறித்து பலரும் கவலைப்படுவதை பார்க்க முடிகிறது. இணையதளங்களில், கலாச்சார சீரழிவு, கவன திசைதிருப்பல் என்று பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பலவாறும் எதிர்மறை விமர்சனங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகிறது. உண்மையில் பார்த்தால், பிக்பாஸ் நிகழ்ச்சி, பார்வையாளர்கள் உள்ளத்தில் எதிர்மறை சிந்தனைகள் தோற்றுவிக்கவில்லை. மாறாக, ஏற்கனவே ஒவ்வொருவரின் மனதிலும் ஒளிந்து, முகமற்று, தெம்பற்று கிடந்த மனதின் எதிர்மறை உணர்வுகளுக்கு மீண்டும் ஊட்டமளித்து தெம்பூட்டவே செய்கிறது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.


பச்சோந்தி தன பண்புடையவர், எதையும் குறை கூறி, புறம்பேசித் திரிபவர், அகந்தையோடு சேரி பிஹேவியர் குறித்து பேசும் ஒருவர், தூங்கும் நேரத்தில் அணிகிற குட்டை டிரவுசர் உடையை எந்நேரமும் போட்டுக்கொண்டு வலம் வருபவர், மனநல பிரச்னை உள்ளவர், தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு அனைவரும் அன்பாக கட்டிப்பிடிக்கும் ஒருவர் என்று திறம் திட்டத்தோடு தேர்தெடுக்கப்பட்ட குழுவாக இருக்கிறது பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் குழு. இந்த சமூகத்தின் கீழ்மை பண்புகள் எதையெல்லாம் வரையறுத்து, மனதின் அடியாழத்தில் புதைத்துக்கொண்டோமோ, அவற்றுக்கு மேடை அமைத்து கொடுத்தால் எப்படியிருக்கும்? அதை கெட்டிக்காரத்தனமாக செய்வதில்தான், பிக்பாசின் பிரம்மாண்ட வெற்றியும், அதன் உற்சாக கொண்டாட்டமும் அடங்கியிருக்கிறது என்பதை நாம் கவனித்து பாரத்தால் புரியும். இந்நிகழ்ச்சி தமிழில் மட்டும் நடத்தப்படும் நிகழ்ச்சி இல்லை. ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் சக்கைப்போடு போட்டுவிட்டுதான், தற்போது தமிழகத்திலும் ஒரு பிரளயத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அதேசமயம் பிக்பாஸ் எங்கெல்லாம் நடத்தப்பட்டதோ, அங்கும் இத்தகைய எதிர்ப்புகளை அது சந்தித்திருக்கிறது. இந்நிகழ்ச்சியின் உலகளாவிய வெற்றி சூத்திரம் ஒன்றுதான்; அடுத்தவர் வீட்டு அந்தரங்கம்; அடுத்தவரின் கீழ்த்தரமான சண்டை சச்சரவுகள்; பிரபலங்கள் என்று நினைப்போரின் சிறுமைத்தனங்கள்; இவை எப்படியிருக்கும் அறிந்துகொள்ள ஏங்கும் சாதாரண மனிதர்களின் உளவியல் விருப்பம்.


தீமையை காட்டினால்தான், அதுபோன்ற தீமையை செய்யக்கூடாது என்று பாடம் படிக்கலாம் என்று நிகழ்ச்சி பற்றி கருத்து கூறும் பிக்பாஸ் கூட, நிகழ்ச்சி மூலம் தீமையை தான் காட்டப்படுகிறது என்பதை மறுக்கவில்லை. தமிழக ஜல்லிக்கட்டின் முகமாக கொண்டாடப்பட்ட ஜூலி , ‘என்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை, ஜூலி’ என்ற பட்டப்பெயர் மூலம் சமூக வலைத்தளங்களில் இன்று கிண்டலடிக்கப்படுகிறார். இதுதொடங்கி நிகழ்ச்சியின் ஒவ்வொரு அம்சம் மீதான விமர்சன தாக்குதலையும் தனக்கு சாதகமாக சுவீகரித்து கொள்வதிலும் பிக்பாசின் கெட்டிக்காரத்தனம் அடங்கியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் வரும் ஒவ்வொரு விமர்சனத்தையும் கூர்ந்து கவனித்தக்கொண்டிருக்கும் பிக்பாஸ், எதையும் அலட்சியம் செய்துவிடாமல் ஒவ்வொன்றுக்கும் மிக விரிவாகவும், குறிப்பாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சி விளக்கம் தருகிறது. பிக்பாஸால் தாங்களும் கவனிக்கப்படுகிறோம் என்கிற குஷி, சமூக வலைத்தளங்களில் உள்ளவர்களை மேலும் தீவிரமாக எதிர்வினையாற்ற வைக்கிறது. ஆக, ஆதரவு கருத்துகளோ, விமர்சன கருத்துகளோ, தமிழர்களின் ஒட்டுமொத்த கவனமும் தன்னை சுற்றியே அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் பிக்பாஸ் தெளிவாக இருக்கிறான்.
பிக்பாஸ் ஏதோ ஒரு காரணத்துக்காக எல்லாவற்றையும் அமைதியாக கவனித்து கொண்டே இருக்கிறான் என்பது உண்மைதான். ஆனால், அந்த பிக்பாஸ் கடவுள் அல்ல; சாத்தான்.

Comments

Popular posts from this blog

‘ பணமற்ற பொருளாதாரம் ’ என்ற மோடியின் மோசடி